விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடைநிறுத்தம்

சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடைநிறுத்தம்

by Bella Dalima 01-07-2022 | 3:56 PM
Colombo (News 1st) எரிபொருள் நெருக்கடி காரணமாக கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. எரிபொருள் நெருக்கடி காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D. தர்மசேன தெரிவித்தார். இந்நிலையில், முதற்கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அவர் கூறினார். பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே விடைத்தாள் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். இதனிடையே, 2021 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. உயர்தர பொறியியல் தொழில்நுட்ப பிரயோக பரீட்சைகள் தற்போது இடம்பெறுகின்றன. பிரயோக பரீட்சைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D. தர்மசேன தெரிவித்தார். கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதற்கமைவாக, 2021ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் 2 வாரங்களுக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.