குடும்ப பின்னணி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியதில்லை

வெளிநாடு செல்லும் பெண்கள் இனி குடும்ப பின்னணி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியதில்லை

by Bella Dalima 28-06-2022 | 6:37 PM
Colombo (News 1st)  குழந்தைகள் உள்ள பெண்கள் தொழிலுக்காக வெளிநாடு செல்லும் போது கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டிய குடும்ப பின்னணி அறிக்கையை நீக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்கள், தமக்கு 05 வயதிற்கும் குறைவான வயதுடைய பிள்ளைகள் இல்லாததை உறுதிப்படுத்தும் வகையில், குடும்ப பின்னணி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியது இதுவரை கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்த நடைமுறையால் பெண்களின் உரிமைகள் மீறப்படுவதாக உரிமைகளுக்கான சர்வதேச அறிக்கைகள் பலவற்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அத்துடன், குடும்ப பின்னணி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான அனைத்து தகைமைகளையும் பூர்த்தி செய்திருந்தாலும் கூட, ஒரு சில அதிகாரிகளின் அசமந்தப்போக்கினால் தாமதங்கள் ஏற்படுவதுடன், வெளிநாடுகளுக்கு செல்லும் எதிர்பார்ப்பிலுள்ள பெண்கள் சிரமங்களுக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய விடயங்களை கருத்திற்கொண்டு தொழில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைவாக, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பிள்ளைகளைக் கொண்ட தாய்மார், தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்லும் போது குடும்ப பின்னணி அறிக்கையை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் எனும் நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்