யாழிலிருந்து விமான சேவை ஜூலை முதல் மீள ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜூலை முதலாம் திகதி முதல் விமான சேவை மீள ஆரம்பம்

by Bella Dalima 28-06-2022 | 6:51 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜூலை முதலாம் திகதி முதல் விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. விமான நிலையத்தின் நாடுகளுக்கிடையிலான போக்குவரத்து நடவடிக்கை கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. எனினும், COVID தொற்று காரணமாக அதன் நடவடிக்கைகள் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இந்நிலையில், யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து தென்னிந்திய விமான நிலையம் வரையில் சேவைகளை முன்னெடுக்க சர்வதேச மற்றும் உள்ளூர் விமான நிறுவனங்களால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக, எதிர்வரும் முதலாம் திகதி முதல் விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.