யூரியா ஏற்றிய கப்பலின் வருகை தாமதம்

யூரியா ஏற்றிய கப்பலின் வருகை தாமதம்

by Bella Dalima 27-06-2022 | 4:04 PM
Colombo (News 1st) யூரியா உரத்தை ஏற்றிய கப்பலின் வருகை மேலும் தாமதமடைவதாக கமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜூலை 6 ஆம் திகதி நாட்டிற்கு வரவிருந்த கப்பல் தாமதமாகியுள்ளதால், உரத்தை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாக கமர்ஷல் உர நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். ஓமனிலிருந்து நாட்டிற்கு வருகைதரவுள்ள குறித்த கப்பலில் 40,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் உள்ளதாக அவர் கூறினார். இந்திய கடனுதவியின் கீழ் இந்த உரம் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக கமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது. மூன்று தரப்பினரூடாக உரத்தின் தரம் ஆய்விற்குட்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தேசிய உர செயலகத்திடம் வினவியபோது, நாட்டிற்கு உர கப்பல் வந்த உடனேயே, இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்களிடம் மாதிரிகளை பரிசோதித்து, ஒரு வாரத்திற்குள் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளதாக செயலகம் தெரிவித்தது.