போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன

உணவு வகைகள், போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன 

by Bella Dalima 26-06-2022 | 3:29 PM
Colombo (News 1st) எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன. இதற்கிணங்க, உணவுப் பொதி உள்ளிட்ட அனைத்து உணவு வகைகளின் விலைகளும் 10 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளது. எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து தமது துறைகளுக்கும் பாதிப்பு எற்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார். தனியார் பஸ் உரிமையாளர்களும் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளனர். எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு இணையாக, நாளை முதல் பஸ் கட்டணத்தை 35 வீதத்தால் அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்தார். இன்று மிகவும் குறைந்தளவிலேயே தனியார் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக அஞ்சன பிரியன்ஜித் கூறினார். இலங்கை போக்குவரத்து சபையின் சாலைகளூடாக எரிபொருளை விநியோகிக்கும் செயற்பாடுகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதால், இன்று 10 வீதமான பஸ்களே சேவையில் ஈடுபடுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ​கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார். நாளைய தினம் முழுமையாக பஸ் சேவைகள் முடங்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார். ரயில் கட்டணத்தை சுமார் 50 வீதத்தால் அதிகரிக்குமாறு அமைச்சரவையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளாந்த ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், மட்டுப்படுத்தப்பட்ட கட்டணத்தினால் எரிபொருள் செலவை ஈடுசெய்ய முடியாதுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் பிரதி போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன கூறினார். நாளொன்றில் ரயில் ஒன்றுக்கு ஒரு இலட்சம் லிட்டருக்கும் அதிக எரிபொருளை பயன்படுத்துவதால், நட்டத்தை ஈடு செய்வதற்காக, கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என அவர் கூறினார். இதேவேளை, முச்சக்கர வண்டி கட்டணமும் இரண்டாவது கிலோமீட்டரில் இருந்து 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.