சட்டவிரோத அவுஸ்திரேலிய பயணம்; 35 பேர் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 35 பேர் கடற்படையினரால் கைது

by Bella Dalima 24-06-2022 | 4:24 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்கு பயணிக்க முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (23) மாலை பாணந்துறை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​35 பேரை ஏற்றிச்சென்ற சந்தேகத்திற்கிடமான பலநாள் மீன்பிடி இழுவை படகை கடற்படையினர் இடைமறித்துள்ளனர். இதன்போது, கைது செய்யப்பட்டவர்களில் இந்த மோசடியில் ஈடுபட்ட 05 பேர் உட்பட 25 ஆண்களும் 04 பெண்களும் 06 குழந்தைகளும் உள்ளனர். சந்தேகநபர்களுடன், இந்த சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்ட மீன்பிடிப் படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த படகை கடற்படையினர் சோதனையிட்ட போது, படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதும், அது நீண்ட கடற்பயணத்திற்கு பொருத்தமற்றது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு, நீர்கொழும்பு, கல்பிட்டி மற்றும் நுவரெலியாவை சேர்ந்த 06 முதல் 56 வயதுடையவர்களாவர். அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான மற்றும் ஆபத்தான கடல் பயணங்களில் அப்பாவி பொதுமக்களை ஈடுபடுத்தும் ஆட்கடத்தல்காரர்களின் வலையில் சிக்க வேண்டாம் என கடற்படை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், பொருத்தமற்ற மீன்பிடி படகுகள் மூலம் இடம்பெயர முற்படுவது உயிருக்கு ஆபத்தானது எனவும் கடற்படை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.