இலஞ்ச ஊழல் வழக்கிலிருந்து முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம விடுதலை

இலஞ்ச ஊழல் வழக்கிலிருந்து முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம விடுதலை

இலஞ்ச ஊழல் வழக்கிலிருந்து முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம விடுதலை

எழுத்தாளர் Bella Dalima

24 Jun, 2022 | 5:00 pm

Colombo (News 1st) இலங்கை போக்குவரத்து சபையில் இல்லாத ஒரு பதவியை உருவாக்கி, அதற்காக சம்பளம் வழங்கியதால், அரசிற்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச ஊழல் வழக்கிலிருந்து முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதம நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கொன்றை தாக்கல் செய்யும் போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களினது கையொப்பம் அவசியம் என்ற போதிலும், குறித்த வழக்கில் இந்த நடைமுறை பின்பற்றப்படாமையால் வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

உரிய நடைமுறைகளை பின்பற்றி வழக்கு தாக்கல் செய்யாமையால், இதனை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என குமார வெல்கம சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி கடந்த வழக்கு தவணையின் போது அடிப்படை ஆட்சேபனையை மன்றில் முன்வைத்திருந்தார்.

இந்த விடயங்களை ஆராய்ந்த பின்னர், மீண்டும் வழக்கு தாக்கல் செய்வதற்கான உரிமையின் அடிப்படையில் , இந்த வழக்கை வாபஸ் பெறுவதற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில், இலங்கை போக்குவரத்து சபையில் காணப்படாத பிரதி தலைவர் பதவியை உருவாக்கி அதற்கு சம்பளத்தை வழங்கியமையூடாக 30 இலட்சம் ரூபா பணத்தை அரசுக்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்