பெட்ரோல் கப்பலின் வருகை தாமதமடையும்

பெட்ரோல் கப்பலின் வருகை தாமதமடையும்; எரிசக்தி அமைச்சு தெரிவிப்பு

by Bella Dalima 23-06-2022 | 3:58 PM
Colombo (News 1st) இன்று (23) காலை நாட்டிற்கு வரவிருந்த 92 ஒக்டேன் பெட்ரோல் அடங்கிய கப்பல், ஒரு நாள் தாமதித்தே நாட்டை வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று காலை நாட்டை வந்தடையவிருந்த பெட்ரோல் கப்பலுக்கு முன்னரே கடன் கடிதங்கள் திறக்கப்பட்டிருந்ததாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார். குறித்த பெட்ரோலை பெற்றுக்கொடுப்பதற்கு முன்னர் சர்வதேச வங்கி சாட்சியாளரை அல்லது முழுமையான தொகையை செலுத்த வேண்டும் என விநியோ​கஸ்தர் நிபந்தனை விதித்திருந்ததாக பெட்ரோலிய தொழிற்சங்கம் நேற்று தெரிவித்திருந்தது. அதற்கமைய, இலங்கையானது இந்தியாவின் HSBC வங்கியை சாட்சியாளராக முன்வைப்பதாகக் கூறிய போதிலும் விநியோகஸ்தர் அதனை நிராகரித்துள்ளதாக தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் வினவிய போது, குறித்த பெட்ரோலுக்கான முழுமையான கட்டணத்தை செலுத்திவிட்டதாக தெரிவித்தது. பெட்ரோலை ஏற்றிய கப்பல் தாமதமடையும் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கூறினாலும், மற்றுமொரு பெட்ரோல் கப்பல் இன்று இரவு நாட்டை வந்தடையவுள்ளதாக அமைச்சு இன்று பிற்பகல் தெரிவித்தது. அதில் 35,​000 மெட்ரிக் தொன் பெட்ரோல் உள்ளதாகவும் அந்த பெட்ரோலை தரையிறக்கும் பணிகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சு தெரிவித்தது. எனினும், சர்வதேச கப்பல் போக்குவரத்து பயணக் கட்டமைப்பில் இலங்கையை அண்மித்து ஒரு எரிபொருள் கப்பல் மாத்திரமே தென்படுகிறது. குறித்த கப்பல் இந்தியாவில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு பயணிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை நேற்று அண்மித்திருந்தது. எனினும், அந்த கப்பலும் இந்தோனேஷியாவை நோக்கி இன்று பிற்பகல் பயணத்தை ஆரம்பித்துள்ளது. இதனிடையே, எதிர்வரும் 28 அல்லது 29 ஆம் திகதி மசகு எண்ணெய் கப்பல் வரும் என்பதை உறுதிப்படுத்தாவிட்டால், சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை இன்று இரவு நிறுத்த வேண்டி ஏற்படுமென எரிபொருள் கூட்டுத்தாபன பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மசகு எண்ணெய் கப்பலின் வருகையை உறுதிப்படுத்துவதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கூறினாலும் இதுவரை அதனை செய்யவில்லையென அந்த சங்கம் மேலும் கூறியுள்ளது.