மின் விநியோக நடவடிக்கையில் சிக்கல்?

மின் விநியோக நடவடிக்கையில் பாரிய சிக்கல்கள் ஏற்படும் என எச்சரிக்கை

by Bella Dalima 23-06-2022 | 4:31 PM
Colombo (News 1st) நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதி பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மின் விநியோகம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதால், கட்டமைப்பில் இழக்கப்பட்ட பெரும்பகுதி மின்சாரத்தை, டீசல் மின் உற்பத்தி நிலையங்கள் ஊடாக பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. எவ்வாறாயினும், எண்ணெய்க்காக 34 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். தரையிறக்கப்படும் எண்ணெய், மின்னுற்பத்தி, தொழிற்சாலைகளின் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என குறித்த ட்விட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் மீண்டும் வழமைக்கு கொண்டு வரப்படும் வரை, 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்குள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அமைச்சர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார். எனினும், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் 75 நாட்களுக்கு பின்னர் தேவைப்படும் நிலக்கரி உள்ளதா என்பதிலும் பிரச்சினை உருவாகியுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல், அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை, நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை பெற்றுக்கொள்ள இதுவரை முன்பதிவு செய்யப்படவில்லை என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த காலத்திற்கு 22 இலட்சம் மெட்ரிக் தொன் நிலக்கரி தேவைப்படுவதுடன், அதன் பொருட்டு 610 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி தேவைப்படுகின்றது. இந்த பணம் இதுவரை திரட்டப்படவில்லை என தெரிவித்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், குறித்த பணத்தை திரட்ட முடியவில்லையாயின், மின் விநியோக நடவடிக்கையில் பாரிய சிக்கல்கள் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார்.