இலங்கைக்கு அதிகபட்ச ஒத்துழைப்புகளை வழங்குவோம்: இந்திய வௌியுறவு செயலாளர் தெரிவிப்பு

இலங்கைக்கு அதிகபட்ச ஒத்துழைப்புகளை வழங்குவோம்: இந்திய வௌியுறவு செயலாளர் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

23 Jun, 2022 | 4:59 pm

Colombo (News 1st) நெருக்கடி நிலையிலிருந்து இலங்கை மீண்டெழுவதற்கு அதிகபட்ச ஒத்துழைப்புகளை நெருங்கிய நண்பர் என்ற அடிப்படையில் இந்திய அரசாங்கம் வழங்கும் என இந்திய வௌியுறவு செயலாளர் வினய் குவாத்ரா (Vinay Kwatra) தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்திய தூதுக்குழுவினர், கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்த போதே வினய் குவாத்ரா இதனை கூறியுள்ளார்.

இந்திய கடனுதவியின் கீழ் எரிபொருள், மருந்துப்பொருட்கள், உரம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தற்போதும் இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் மீளாய்வு செய்த இந்திய தூதுக்குழுவினர், இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு இந்த அரசும் அரசியல்வாதிகளும் அர்ப்பணிப்புடன் உள்ளதாக கூறியுள்ளனர்.

நெருக்கடி நிலையில் இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்க இந்திய அரசு சிறந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த உதவிகளுக்காக இலங்கை அரசினதும் மக்களினதும் நன்றிகளை இந்திய தூதுக்குழுவிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் அதனை வழமைக்கு கொண்டு வருவதற்கும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய செயற்றிட்டங்கள் குறித்து இரு தரப்பிற்கும் இடையில் நீண்ட கலந்துரையாடல் இன்று இடம்பெற்றுள்ளது.

நெருக்கடியான காலப்பகுதிக்கு பின்னர் மிக விரைவில் நாடு வழமை நிலையை அடையக்கூடும் என இந்திய தூதுக்குழுவினர் நம்பிக்கை வௌியிட்டுள்ளனர்.

இந்திய பொருளாதாரம் தொடர்பான செயலாளர் (Ajay Seth), தலைமை பொருளாதார ஆலோசகர் கலாநிதி வி.ஆனந்த நாகேஸ்வரன், (V Anantha Nageswaran), இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே (Gopal Baglay), பிரதி உயர்ஸ்தானிகர் விநோத் கே. ஜேகப், (Vinod K Jacob), இந்து சமுத்திர பிராந்திய ஒன்றிணைப்பின் செயலாளர் கார்த்திக் பாண்டே (Kartik Pande) மற்றும் ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் ஆகியோர் இன்றைய பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்