இலஞ்சம் பெற்ற பிரதேச சபை ஊழியருக்கு விளக்கமறியல்

இலஞ்சம் பெற்ற ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தலைமை எழுதுவினைஞர் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்

by Staff Writer 22-06-2022 | 7:09 PM
Colombo (News 1st) 15 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு - செங்கலடி, ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தலைமை எழுதுவினைஞர் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு நீதவான் ஏ.பீட்டர் போல் முன்னிலையில் சந்தேகநபர்கள் இருவரும் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, எதிர்வரும் ஜூலை மாதம் 04 ஆம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 15 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தலைமை எழுதுவினைஞர் உள்ளிட்ட இருவர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர். வர்த்தகர் ஒருவரின் காணியை துண்டித்து விற்பனை செய்வதற்கு உதவி புரிவதற்காக 20 இலட்சம் ரூபாய் இலஞ்சமாக கோரப்பட்டுள்ளது. பிரதேச சபை உத்தியோகத்தர்களால் கோரப்பட்ட இலஞ்ச பணத்தில், 15 இலட்சம் ரூபாவை வர்த்தகரிடமிருந்து பெற்றுக்கொண்ட போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தலைமை எழுதுவினைஞரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் முன்னாள் ஒருங்கிணைப்பு செயலாளர் ஒருவருமே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான அடுத்த வழக்கு விசாரணை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.