அமெரிக்க வங்கி இலங்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை; ராஜபக்ஸ குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டு

அமெரிக்க வங்கி இலங்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை; ராஜபக்ஸ குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டு

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2022 | 4:18 pm

Colombo (News 1st) ஜூலை 25 ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ள ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சர்வதேச பிணையங்களுக்காக, 25% முதலீட்டை செய்துள்ள அமெரிக்க நிறுவனமொன்று, ஆரம்ப முதலீடு மற்றும் அதற்கான வட்டியை அறிவிடுவதற்காக இலங்கைக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

நியூயோர்க் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

250 மில்லியன் டொலருக்கும் அதிக நிதி மற்றும் 7.3 மில்லியன் டொலர் வட்டி ஆகியவற்றை ஜூலை 25 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச கடன்களை மீள செலுத்த முடியாது என இலங்கை ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்த பின்புலத்தில், ஜூலை 25 ஆம் திகதி ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பிணைமுறி காலாவதியாகவுள்ளது.

2012 ஆம் ஆண்டு அமெரிக்காவின் HSBC வங்கியுடன் அப்போதைய மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்ட அஜித் நிவாட் கப்ரால் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கைக்கு அமைய, ஒரு பில்லியன் டொலருக்கான பிணைமுறி பெற்றுக்கொள்ளப்பட்டது.

அதில் 250.19 மில்லியன் டொலர் பிணையை தனிநபர் முதலீடாக, அமெரிக்காவின் ஹமில்ட்டன் ரிசர்வ் வங்கி (Hamilton Reserve Bank) என்ற வரையறுக்கப்பட்ட நிறுவனமொன்றிடம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த பிணையங்கள் காலாவதியாகும் போது 5.8 வீத வட்டி செலுத்தப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

எதிர்வரும் ஜுலை மாதம் 25 ஆம் திகதி இந்த பிணையம் காலாவதியாகும் போது, முதலீட்டுக்காக 7.349 மில்லியன் டொலர் வட்டியை செலுத்த வேண்டியுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் பிணையை திருப்பிச்செலுத்தும்போது, கடனை திருப்பி செலுத்துவதற்கான இயலுமை காணப்படுவதாகவே இலங்கை அதிகாரிகள் கூறியதாகவும் அமெரிக்காவின் ஹமில்டன் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனமைக்கு , ஆட்சி செய்யும் ராஜபக்ஸக்களும், அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளின் செயற்பாடுகளுமே காரணம் என அமெரிக்க நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜபக்ஸ குடும்பத்தவர்கள் பல வருடங்களாக ஊழல் மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்படுவோர். அமெரிக்காவின் முன்னாள் இராஜதந்திரியும் புலனாய்வு ஊடகவியலாளருமான ஒருவரால் வௌியிடப்பட்ட தரவுகளுக்கு அமைய, ராஜபக்ஸ குடும்பத்தினர் பல பில்லியன் டொலர் சொத்துகளை குவித்து, தளர்வான நிதி விதிகளுடன் துபாய், சீஷெல்ஸ் மற்றும் St.Martin தீவில் மறைத்து வைத்துள்ளனர். அமெரிக்காவின் தரவுகளுக்கு அமைய, பசில் ராஜபக்ஸ என்ற இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர் அரசாங்கத்தில் பதவிகளை வகிப்பதற்கு முன்பிருந்தே Mr.10% என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டார். அனைத்து செயற்றிட்டங்களிலிருந்தும் 10% தரகுப் பணத்தைக் கோரும் வழக்கம் அவரிடம் காணப்பட்டமையாலேயே இவ்வாறு அழைக்கப்பட்டார்

இலங்கையினால் இந்த வழக்கில் இருந்து விடுபடுவதற்கு எவ்வித விடுபாட்டு உரிமையும் இல்லையென ஹமில்டன் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்துள்ள மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்