by Staff Writer 21-06-2022 | 4:13 PM
Colombo (News 1st) தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
இந்த எழுத்தாணை மனுவை தாக்கல் செய்த போது நீதவான் நீதிமன்றத்தால் எவ்வித பிடியாணை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கவில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மனுதாரரினால் அலரி மாளிகையில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படும் கருத்து தொடர்பில் தீர்மானத்தை எடுப்பதற்கான சரியான நபர் நீதவான் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 09 ஆம் திகதி இரவு 08 மணிக்கு முன்னர் நீதவான் முன்னிலையில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவிற்கு அமைய, மனுதாரர் செயற்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தது.
எனினும், அன்றைய தினம் மனுதாரர் சுயமாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனவும், நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே அச்செயற்பாடு இடம்பெற்றதாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் சட்டரீதியாக நீதவான் நீதிமன்றத்தால் இந்த வழக்கு தொடர்பில் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடந்த 09 ஆம் திகதி மாலை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவின் வீட்டிற்கு சென்று ஆஜராகினார்.
இதன்போது, 10 மில்லியன் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல நீதவான் உத்தரவிட்டதுடன், வௌிநாட்டு பயணத் தடையும் விதித்தார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் வழங்கப்படும் திகதியில் வாக்குமூலம் வழங்க வேண்டும் என இதன்போது நீதவான் உத்தரவிட்டிருந்தார்.