பரீட்சை மதிப்பீட்டு பணிகளில் சிக்கல்

பரீட்சை மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் எரிபொருள் கோரி கவனயீர்ப்பு போராட்டம் 

by Bella Dalima 20-06-2022 | 4:23 PM
Colombo (News 1st) எரிபொருள் நெருக்கடி காரணமாக கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். தங்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 10 நாட்களுக்கு விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நடைபெற உள்ள நிலையில், தங்களுக்கான எரிபொருள் இன்மையால் விடைத்தாள் மதிப்பிடும் நிலையத்திற்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்படுவதாக தெரிவித்து ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். எரிபொருள் நிரப்புவதற்கு விசேட அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட போதிலும், எரிபொருள் நிலையத்திலும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியவில்லை என ஆசிரியர்கள் குறிப்பிட்டனர். இதேவேளை, யாழ்.நெல்லியடி மத்திய கல்லூரியில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களும் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். எரிபொருள் பெற்றுக்கொடுக்கப்படும் என பொலிஸார் வாக்குறுதி வழங்கியதையடுத்து, கவனயீர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டு, விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். இந்நிலையில், கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு நாளாந்தம் ஒதுக்கப்பட்ட நேரத்தில் எரிபொருளை விநியோகிக்க தயார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இதற்கமைய, காலை 6 மணி முதல் 7 மணி வரையான மற்றும் மாலை 5 மணி முதல் 6 மணி வரையான காலப்பகுதியில் ஆசிரியர்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதற்காக ஆசிரியர்கள் தமது நியமனக் கடிதம், கடமை அடையாள அட்டை மற்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள கடிதம் என்பனவற்றை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காண்பிக்க வேண்டியது கட்டாயமானதென கல்வியமைச்சர் தெரிவித்தார். இதனிடையே, பரீட்சை மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறினார்.