நகர பாடசாலைகளுக்கு ஒரு வாரத்திற்கு விடுமுறை

நகரங்களிலுள்ள பாடசாலைகளுக்கு ஒரு வாரத்திற்கு விடுமுறை; ஒன்லைன் மூலம் கற்பிக்க நடவடிக்கை 

by Bella Dalima 20-06-2022 | 3:53 PM
Colombo (News 1st) கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல் மிகுந்த நகரங்களில் அமைந்துள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் இன்று முதல் ஒரு வாரத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சிரமங்கள் ஏற்படாத கிராமிய பாடசாலைகளை நடத்திச்செல்வதற்கும் கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல் மிக்க பகுதிகளிலுள்ள ஏனைய பாடசாலைகளில் இவ்வாரம் ஒன்லைன் ஊடாக கல்வி செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பஸ்களில் அல்லது வேன்களில் பயணிக்க வேண்டிய தேவை எற்படாத, கிராமங்களுக்குள்ளேயே காணப்படுகின்ற 3000 பாடசாலைகள் உள்ளன. எனவே, கிராமத்திற்குள்ளேயே இருக்கின்ற பாடசாலைகள் மாத்திரம் அன்றி, C வகை பாடசாலைகள் , 2 ஆம் வகை பாடசாலைகள், C B  வகை பாடசாலைகள் போன்ற போக்குவரத்து நெருக்கடியற்ற பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகளை முன்னெடுப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என கல்வியமைச்சர் தெரிவித்தார். எனவே, அத்தகைய பாடசாலைகள் தொடர்பில் அதிபர்களுக்கு தீர்மானிக்க முடியுமெனவும் அவர் கூறினார். நகர்ப்புற பாடசாலைகளில் உள்ள மாணவர்களுக்கு போக்குவரத்து பிரச்சினை காணப்படுவதால், அவர்கள் அருகில் உள்ள பாடசாலைகளுக்கு தற்காலிகமாக சென்று கல்வி கற்க முடியுமென கல்வியமைச்சர் தெரிவித்தார். தேவையின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அதிபர்களுக்கு இயலுமை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் சேவைக்கு சமூகமளிக்க வேண்டியது கட்டாயமானதில்லை எனவும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார். ஏதேனும் ஒரு பாடசாலையில் தூர பிரதேச ஆசிரியர்கள் சிலர் பணியாற்றுவார்களாயின், போக்குவரத்து பிரச்சினை காரணமாக அவர்களுக்கு வர முடியாமல் போனால் அதனால் நெருக்கடி ஏற்படாதெனவும் அவர் கூறினார். அதிபர்களதும் ஆசிரியர்களதும் சேவையை தன்னார்வ சேவையாகவே கருதுவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் குறிப்பிட்டார். இதனிடையே, கல்வி பொது தராதர உயர்தர மாணவர்களுக்காக முறைமைக்குட்படுத்தப்பட்ட கல்வியை வழங்கும் வகையிலான வேலைத்திட்டமொன்றை அடுத்த மாதம் முதல் வாரத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சர் கூறினார். இதேவேளை, எதிர்வரும் 02 வாரங்களுக்குள் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஒன்லைன் ஊடாக முன்னெடுத்துச்செல்ல முடியுமென கல்வியமைச்சின் செயலாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.