ஜனாதிபதி செயலக நுழைவாயில் மறிப்பு;21 பேருக்கு பிணை

ஜனாதிபதி செயலகம், நிதி அமைச்சின் நுழைவாயில்கள் மறிப்பு; கைதான 21 பேருக்கு பிணை

by Bella Dalima 20-06-2022 | 8:31 PM
Colombo (News 1st) ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி அமைச்சின் லோட்டஸ் வீதியிலுள்ள நுழைவாயில்களை மறித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் 21 பேரும் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் தேரர் ஒருவரும் 4 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். நிதி அமைச்சு மற்றும் திறைசேரிக்கு பயன்படுத்தப்படும் இரண்டு நுழைவாயில்களை ஆர்ப்பாட்டகாரர்கள் மறித்துள்ளதுடன், அந்த நுழைவாயில்களுக்கு முன்பாக சிறிய கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால், அத்தியாவசிய சேவைகளுக்கு சென்ற அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் நிதி அமைச்சின் செயலாளருக்கும் இடையில் நடத்தப்படவிருந்த கலந்துரையாடலுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து கோட்டாகோகம போராட்டக்களம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இன்று 73 ஆவது நாளாகவும் ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களால், ஜனாதிபதி செயலகத்தின் ஏனைய இரண்டு நுழைவாயில்களும் இன்று அதிகாலை மறிக்கப்பட்டன. இதனால் ஜனாதிபதி செயலகத்திற்கான மூன்று நுழைவாயில்களும் மூடப்பட்டுள்ளதுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைது செய்தனர். இதன் பின்னர் குறித்த இடத்தில் இலங்கை இராணுவத்தின் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.