ஆட்கடத்தல் அதிகரித்துள்ளதாக இந்திய கடற்படை தகவல்

ஆட்கடத்தல் அதிகரித்துள்ளதாக இந்திய கிழக்கு கடற்படை தளபதி தெரிவிப்பு 

by Bella Dalima 19-06-2022 | 10:53 PM
Colombo (News 1st) இந்தோ - பசுபிக் பிராந்திய கடற்பரப்பில் இந்திய கடற்படையின் செயற்பாடுகள் பூகோள ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதென இந்தியாவின் கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சஞ்சய் வாத்சயன் தெரிவித்தார். தமிழகத்தின் அரக்கோணத்திலுள்ள I.N.S. ராஜாளி கடற்படை விமானத்தளத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் கூறியதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது. கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் போன்ற நாடு கடந்த குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள வைஸ் அட்மிரல் சஞ்சய் வாத்சயன், பொருளாதார அதிகார போராட்டம், ஊடுருவல் போன்ற அச்சுறுத்தும் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். இந்திய கடற்படையில், குறிப்பாக கடற்படை விமான போக்குவரத்தில் எந்த சவாலுக்கும் பதிலளிக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வருடம் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜப்பான், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், இலங்கை, இந்தோனேஷியா, ஓமன், ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட கடல் பரப்பு நட்பு நாடுகளுடன், முழு வீச்சில் கூட்டு பயிற்சியில் இந்திய கடற்படை ஈடுபட்டு வருகின்றது.