பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவிப்பு

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களை விடுதிகளிலிருந்து வௌியேறுமாறு அறிவுறுத்தல் 

by Staff Writer 18-06-2022 | 3:43 PM
Colombo (News 1st) பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் M.D. லமாவன்ச கூறினார். இதன்படி, மாணவர்கள் விடுதிகளிலிருந்து வௌியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உபவேந்தர் தெரிவித்தார். எரிபொருள் நெருக்கடி மற்றும் உணவகங்களை பராமரிக்க முடியாத நிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பல்கலைக்கழகத்தின் அத்தியாவசிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பல்கலைக்கழகங்களில் விடுதிகளிலுள்ள மாணவர்களுக்கு உணவு வழங்குவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்தார். தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு பல்கலைக்கழகத்தின் வழமையான செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் உபவேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது நடைபெற்று வரும் பரீட்சைகளை காலம் தாழ்த்தாது நடத்துமாறும் பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது. எவ்வாறாயினும், பல்கலைக்கழக மாணவர்களின் கல்வியை எவ்வித இடையூறும் இன்றி ஒன்லைன் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் சந்தன உடவத்த கூறினார்.