பஸ் கட்டண அதிகரிப்பால் ரயிலில் பயணித்த இளைஞர் தண்டவாளத்தில் வீழ்ந்து உயிரிழப்பு

பஸ் கட்டண அதிகரிப்பால் ரயிலில் பயணித்த இளைஞர் தண்டவாளத்தில் வீழ்ந்து உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Jun, 2022 | 10:33 pm

Colombo (News 1st) நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு மாற்றீடாக
பொது போக்குவரத்தே காணப்படுகின்றது.

தற்போது பஸ்கள் குறைவாக சேவையில் ஈடுபடுவதாலும் கட்டண அதிகரிப்பாலும் மக்கள் ரயில் சேவையை நாடுகின்றனர்.

அவ்வாறு ரயிலில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திக்வல்ல – வலஸ்கலவை சேர்ந்த நான்கு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் மூத்த பிள்ளையே சந்தரு ருசர விதானகே.

தந்தையின் வருமானம் போதாமை காரணமாக கல்வியின் பின்னர் குடும்ப பாரத்தை
சந்தரு சுமந்திருந்தார்.

பணி முடிவடைந்து பஸ்ஸில் வீட்டிற்கு திரும்பும் வழக்கத்தை கொண்டிருந்தார். எனினும், தற்போது பஸ்ஸில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பஸ் கட்டணமும் அதிகரித்துள்ளது.

150 ரூபாவிற்கு கட்டணம் செலுத்தி பஸ்ஸில் பயணிப்பதற்கு பதிலாக 25 ரூபாவை செலுத்தி ரயிலில் பயணிப்பதால் செலவைக் கட்டுப்படுத்த முடியும் என்ற தீர்மானத்தை சந்தரு மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், சாகரிக்கா எக்ஸ்பிரஸ் ரயில் இரண்டு மணித்தியாலங்கள் தாமதித்தே மாத்தறை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. சந்தருவிற்கு குறித்த ரயிலில் ஏற முடியவில்லை.

பெருமளவிலான பயணிகள் ரயிலில் ஏறியமை காரணமான நெரிசலில் ரயிலில் ஏறுவதற்கு முயற்சித்த சந்தர்ப்பத்தில், ரயிலில் இருந்து கை நழுவி ரயில் தண்டவாளத்தில் சந்தரு வீழ்ந்துள்ளார்.

மிகுந்த சன நெரிசல் காரணமாக விபத்திற்குள்ளான சந்தருவை மீட்பதற்கு ஒரு மணித்தியாலம் வரை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இறுதியில் அவரை மாத்தறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையிலும் சந்தருவின் உயிரரைக் காப்பாற்ற முடியவில்லை.

 

குடும்பத்தின் சுமையைத் தாங்குவதற்காக பணிக்கு சென்ற சந்தருவின் வீட்டில் இன்று அழுகுரலே கேட்கின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்