நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

by Staff Writer 17-06-2022 | 7:29 PM
Colombo (News 1st) கிடைக்கும் எரிபொருளை நாடளாவிய ரீதியில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார். நிதி அமைச்சு, மத்திய வங்கியுடன் இணைந்து அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஒத்துழைப்புடன் போதுமான எரிபொருளை முன்பதிவு செய்வதற்கான நாணய மாற்று பத்திரங்களை திறப்பதற்கும் திட்டங்களை வகுக்க வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார். பெட்ரோல், டீசல், எரிவாயு விநியோகம் மற்றும் இறக்குமதி தொடர்பில் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த விடயங்களை தெரிவித்துள்ளார். நீண்ட காலத்திற்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு விநியோகத்தர்களுடன் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்வதற்கான இயலுமை தொடர்பிலும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோகத்தின் போது, பொது போக்குவரத்திற்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. தேவையற்ற வகையில் எரிபொருளை சேமித்து வைப்போருக்கு எதிராக கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது கையிருப்பில் உள்ள எரிவாயுவை உரிய முறையில் பகிர்ந்தளிப்பதற்கும், விரைவாக எரிவாயுவை முன்பதிவு செய்வது தொடர்பிலும் இன்றைய கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.