எவரும் பசியோடு வாடக்கூடாது!

எவரும் பசியோடு வாடக்கூடாது; மீனவர் சமூகத்திற்கு முன்னுரிமை வழங்குமாறு பிரதமர் ஆலோசனை

by Staff Writer 17-06-2022 | 7:14 PM
Colombo (News 1st) உணவு பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கான பொருத்தமான வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்து, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஆலோசனை வழங்கியுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இன்று (17) நடைபெற்ற உணவு பாதுகாப்பு தொடர்பான குழுவின் கூட்டத்தில் பிரதமர் இதனை கூறியுள்ளார். ஆளும் மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதேச செயலாளர்களூடாக குழுக்களை அமைத்து, உணவு பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு பிரதமர் இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார். சுரேன் பட்டகொடவின் தலைமையிலான குழுவினூடாக உணவு பாதுகாப்பு தொடர்பில் தேவையான வேலைத்திட்டம் தயாரிக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. உணவு நெருக்கடியினால் எவரும் பசியோடு வாடக்கூடாது என்பதே தமது கொள்கை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். உணவு நெருக்கடியானது எதிர்காலத்தில் 4 மில்லியன் முதல் 5 மில்லியன் இலங்கையர்களை நேரடியாக பாதிக்கக்கூடியதாக இருந்தாலும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். மீனவர் சமூகத்திற்கு உணவு, எரிவாயு மற்றும் எரிபொருள் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஏனைய செய்திகள்