மனிதப் புதைகுழி வழக்கு:  அறிக்கை சமர்ப்பிப்பு

மன்னார் மனிதப் புதைகுழி வழக்கு: அகழ்வுப் பணிகள் தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

by Staff Writer 15-06-2022 | 5:44 PM
Colombo (News 1st) மன்னார் சதொச வளாக மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணியினை முன்னெடுப்பது தொடர்பான அறிக்கை மன்னார் நீதவான் நீதிமன்றத்திடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. மன்னார் நீதவான் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அகழ்வுப் பணியை மேற்கொள்ளும் தொல்பொருள் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவவும் சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஸவும் இன்று மன்றில் ஆஜராகியிருக்கவில்லை. எனினும், அவர்களுடைய அறிக்கை, பதிவுத் தபால் மூலம் மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. மனிதப் புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு குறித்த அறிக்கையின் பிரதிகள் இன்று வழங்கப்படவில்லை எனவும் பிறிதொரு தினத்தில் அதனை பெற்று, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி குறிப்பிட்டார். மனிதப் புதைகுழியிலிருந்து ஏற்கனவே மீட்கப்பட்ட எச்சங்கள், தடயப் பொருட்களை பிரித்தெடுப்பதற்கு உசிதமான திகதியை எதிர்வரும் ஜூலை 20 ஆம் திகதி மன்றுக்கு அறிவிக்க வேண்டும் என மன்னார் நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். அதற்கமைய, இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.