சனத் நிஷாந்த, சமன்லால் பெர்னாண்டோவிற்கு பிணை

சனத் நிஷாந்த, சமன்லால் பெர்னாண்டோவிற்கு பிணை

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2022 | 6:10 pm

Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினரான சனத் நிஷாந்த மற்றும் மொரட்டுவை நகர சபை தலைவர் சமன்லால் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் தலா​ 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டார்.

கடந்த மே 9 ஆம் திகதி காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, டான் பிரசாந்த் என்ற சந்தேகநபரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு இடமாற்றம் வழங்குமாறும், பொலிஸ் கட்டளைச்சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை அமுல்படுத்தாமைக்கான காரணத்தை தௌிவுபடுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பில் மன்றில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பிணை வழங்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

மொரட்டுவை நகரசபையின் உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட 03 பேரை வழக்கின் சந்தேகநபர்களாக பெயரிடுவதாக இதன்போது சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்