கப்பம் கோருவதற்காக பெண்ணை கடத்திய நால்வர் வவுனியாவில் கைது

கப்பம் கோருவதற்காக பெண்ணை கடத்திய நால்வர் வவுனியாவில் கைது

கப்பம் கோருவதற்காக பெண்ணை கடத்திய நால்வர் வவுனியாவில் கைது

எழுத்தாளர் Staff Writer

14 Jun, 2022 | 9:12 am

Colombo (News 1st) வவுனியா – பூவரசங்குளம் பகுதியில் கப்பம் கோருவதற்காக பெண்ணொருவரை கடத்திச்சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று(14) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

வாரிக்குட்டூர் பகுதியில் பெண்ணொருவர் கடத்திச் செல்லப்பட்டு கப்பம் கோரப்பட்டதாக கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தல்காரர்களால் 05 இலட்சம் ரூபா கப்பம் கோரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, கோரப்பட்ட பணத்தை வழங்குவதற்காக குறித்த பெண்ணின் மகளை அனுப்பி வைக்கும் போர்வையில் பொலிஸார் மிக சூட்சுமமாக செயற்பட்டு கடத்தல்காரர்களை கைது செய்துள்ளனர்.

அத்துடன், கடத்தப்பட்ட 56 வயதான பெண்ணும் பொலிஸாரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 26 தொடக்கம் 49 வயதுக்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பெண், அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பிவைப்பதாக தெரிவித்து சந்தேகநபர்களிடமிருந்து 02 இலட்சம் ரூபா பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பலரிடம் அவர் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

எனவே, இந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்