இரா.சாணக்கியன் பிரதமருக்கு கடிதம்

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதமருக்கு கடிதம்

by Staff Writer 13-06-2022 | 2:17 PM
Colombo (News 1st) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கடிதமொன்றை எழுதியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றப்பட்ட உரை தொடர்பில் பிரதமர் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வன்முறையைத் தூண்டக்கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் தாம் ஒருபோதும் ஈடுபடவோ, ஆதரிக்கவோ, ஊக்குவிக்கவோ இல்லை என்பதை பிரதமர் அவதானித்திருப்பாரென பாராளுமன்ற உறுப்பினர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 3 தசாப்தங்களுக்கு மேல் பலவிதமான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள ஓர் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற போதிலும் சமாதானம், நல்லிணக்கம் மற்றும் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கியதாக அனைத்து இலங்கையர்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளுக்காகவும் தாம் குரல் கொடுத்துவருவதாக அவர் கூறியுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களின் குறைகள், தேவைகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக உணர்ந்தமையினாலேயே மக்கள் வன்முறையான முறையில் எதிர்வினையாற்றியதாக மே 09ஆம் திகதி தமது பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர், பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு ஆறுதலளிக்கும் உடனடி மற்றும் நிலையான நிவாரணம் வழங்கும் திட்டங்களுக்கும் அவர்களின் தற்போதைய குறைகள் மற்றும் எதிர்கால நல்வாழ்விற்காக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தமது ஆதரவை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பிரதமருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.