பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் நியமனம் தொடர்பான வௌிக்கொணர்வு

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் நியமனம் தொடர்பான வௌிக்கொணர்வு

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் நியமனம் தொடர்பான வௌிக்கொணர்வு

எழுத்தாளர் Staff Writer

12 Jun, 2022 | 3:13 pm

Colombo (News 1st) பொலிஸ் நிலையங்களுக்கான பொறுப்பதிகாரிகளை நியமிப்பதற்கு பொலிஸ் திணைக்களத்திடம் முறையான நடைமுறை இல்லை என்பது தெரியவந்துள்ளது.

பொலிஸ்மா அதிபரினால் பொதுச்சேவை ஆணைக்குழுவில் சமர்க்கப்பட்ட அறிக்கை ஒன்றினூடாகவெ இந்த விடயம் தெரியவந்துள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள 182 பொலிஸ் நிலையங்களுக்கு அரசியல் சிபாரிசுகளின் பேரில் பொறுப்பதிகாரிகள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் பொதுச்சேவை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு பதிலளிக்கும் வகையில் பொலிஸ்மா அதிபரினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரிகளை நியமிப்பதற்கான பிரத்தியேக நடைமுறைகள் திணைக்களத்தில் இல்லாத நிலையில், பல்வேறு காரணங்களினாலும் அழுத்தங்களினாலும் சில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் நியமிக்கப்படுகின்றமை பொலிஸ்மா அதிபர் சமர்ப்பித்த அறிக்கையின் மூலம் தெரியவருவதாக பொதுச்சேவை ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதன்பிரகாரம், குறிப்பிட்ட மற்றும் முறையான நடைமுறை திட்டமொன்றை தயாரித்து அனுப்புமாறு ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக பொலிஸ்மா அதிபரினால் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கூடிய தமது ஆணைக்குழு, பொலிஸ்மா அதிபரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைத் திட்டத்தை பரிசீலித்ததாக பொதுச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உரிய திருத்தங்களை இணைத்ததன் பின்னர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளை நியமிப்பதற்கான குறிப்பிட்ட மற்றும் முறையான நடைமுறைத்திட்டம் பொலிஸ் திணைக்களத்திற்கு அனுப்பப்படுமென ஆணைக்குழு கூறியுள்ளது.

இதனிடையே, 3 சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களை இடமாற்றம் செய்வதற்கு பொதுச்சேவை ஆணைக்குழு இணங்கியுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்