பாடசாலை விடுமுறை நாட்களை மட்டுப்படுத்த தீர்மானம்

பாடசாலை விடுமுறை நாட்களை மட்டுப்படுத்த தீர்மானம்

by Staff Writer 12-06-2022 | 4:21 PM
Colombo (News 1st) வருடாந்த பாடசாலை கால அட்டவணையின் பிரகாரம் வழங்கப்படும் விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை குறிப்பிடத்தக்களவு மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கல்விக்கு முன்னுரிமை அளித்து பாடசாலைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறையினருக்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் இதன்போது அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. சீருடை தொடர்பான பிரச்சினைகள் காரணமாக பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை தருவதில் தாமதம் ஏற்படுகின்றமை கல்விக்கு இடையூறாக இருக்கக்கூடாது என அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார். இதனிடையே, எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக இலங்கை போக்குவரத்து சபையினால் மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். அடையாளம் காணப்பட்ட மார்க்கங்களில் பல ரயில்களை சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பிலும் இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவுக்காக ஒதுக்கப்படும் கொடுப்பனவை இருமடங்காக வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் அடுத்த வருடத்திற்கான பாடப் புத்தகங்களை தயாரிப்பதற்குத் தேவையான கடதாசிகளை பெற்றுக் கொள்வதற்கு உரிய மதிப்பீடுகள் திறைசேரிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அடுத்த வருடத்திற்கு தேவையான பாடசாலை சீருடைகளில் 50 வீதத்தை நன்கொடையாக வழங்குவதற்கு சீனா ஏற்கனவே இணங்கியுள்ளதாகவும் மிகுதியை சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பெற்றுக் கொள்வதாக எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதன்போது கூறினார்.