தங்கத்துடன் மூழ்கிக் கிடக்கும் மூன்று கப்பல்கள்

கரீபியன் கடலில் தங்கத்துடன் மூழ்கிக் கிடக்கும் மூன்று கப்பல்கள்

by Bella Dalima 11-06-2022 | 6:52 PM
Colombo (News 1st) கொலம்பியா அருகே கரீபியன் கடல் பகுதியில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சான் ஜோஸ் (San Jose) கப்பல் 600 பேருடன் மூழ்கியது. அதில் 200 தொன் தங்கமும் வௌ்ளியும் இரத்தினங்களும் கப்பலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவை 17 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. 1708 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொலம்பிய தலைநகர் போகோட்டோ அருகே சான் ஜோஸ் கப்பல் கடலில் மூழ்கியுள்ளது. இதையடுத்து, கப்பலை தேடும் பணி பல ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும் தங்கத்துடன் மூழ்கிய சான் ஜோஸ் கப்பல் இருக்கும் இடத்தை துல்லியமாக கொலம்பியா அரசு அறிவித்திருந்தது. ரொசாரியோ தீவுகளுக்கு அருகே கப்பல் மூழ்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், சான் ஜோஸ் கப்பலுக்கு அருகே மேலும் இரண்டு கப்பல்கள் மூழ்கி இருக்கும் காணொளியை ஸ்பெயின் அரசு வெளியிட்டுள்ளது. குறித்த வீடியோவில் சான் ஜோஸ் கப்பலுக்கு அருகே 2 கப்பல்கள் மூழ்கி கிடக்கின்றன. நீலம், பச்சை நிறங்களில் கடலின் அடியில் தங்க நாணயங்கள், மட்பாண்டங்கள், பீங்கான் கோப்பைகள் சிதறி கிடக்கின்றன. ஒரு பீரங்கியும் கடலின் அடிப்பரப்பில் கிடக்கிறது. இது தொடர்பாக ஸ்பெயின் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். தங்க புதையலுடன் கடலில் மூழ்கிய கப்பல் யாருக்கு சொந்தம் என்பதில் சர்ச்சை நிலவுகிறது.