இந்துக்களின் சவாலும் நீலங்களின் சமரும் சமநிலையில் நிறைவு

by Staff Writer 11-06-2022 | 10:06 PM
Colombo (News 1st) கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ், இந்துக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான இந்துக்களின் சவால் மாபெரும் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது. யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் இவ்வருட இந்துக்களின் சவால் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டியில் முதல் இன்னிங்ஸில் யாழ். இந்துக் கல்லூரி அணி 230 ஓட்டங்களை பெற்றது. 03 விக்கெட் இழப்பிற்கு 81 ஓட்டங்களுடன் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த கொழும்பு இந்துக் கல்லூரி அணி முதல் இன்னிங்ஸில் 146 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. 84 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த யாழ். இந்துக் கல்லூரி அணி 117 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தது. அதற்கமைய, போட்டியில் கொழும்பு இந்துக் கல்லூரி அணியின் வெற்றி இலக்கு 201 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது. கொழும்பு இந்துக் கல்லூரி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 67 ஓட்டங்களை பெற்றிருந்த போது, இன்றைய ஆட்டம் முடிவிற்கு வந்தது. இதேவேளை, கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் மற்றும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணிகளுக்கிடையிலான நீலங்களின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்றாகும். போட்டியில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய அணி முதல் இன்னிங்ஸில் 181 ஓட்டங்களையும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி 140 ஓட்டங்களையும் பெற்றன. இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்த கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை நிறுத்தியது. போட்டியில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணிக்கு 200 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 7 விக்கெட் இழப்பிற்கு 109 ஓட்டங்களை கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி பெற்றிருந்த நிலையில், இவ்வருடத்திற்கான நீலங்களின் சமர் சமநிலையில் நிறைவடைந்தது.