லிட்ரோ நிறுவன தலைவர் இராஜினாமா

லிட்ரோ நிறுவன தலைவர் இராஜினாமா

லிட்ரோ நிறுவன தலைவர் இராஜினாமா

எழுத்தாளர் Staff Writer

10 Jun, 2022 | 6:51 pm

Colombo (News 1st) லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் இராஜினாமா செய்துள்ளார்.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்த போதிலும், காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவராக தாம் தொடர்ந்தும் செயற்படுவதாக விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

இலங்கை காப்புறுதி நிறுவனம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றின் முன்னாள் தலைவரான விஜித ஹேரத், கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி லிட்ரோ நிறுவன தலைவராக நியமிக்கப்பட்டார்.

லிட்ரோ நிறுவன முறைகேடுகளை சுட்டிக்காட்டி, அதன் முன்னாள் தலைவரான தேஷர ஜயசிங்க ஏப்ரல் 14 ஆம் திகதி இராஜினாமா செய்ததையடுத்து, அப்பதவிக்கு விஜித ஹேரத் நியமிக்கப்பட்டார்.

இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், அவரும் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதனிடையே, எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி உக்கிரமடைந்துள்ளது.

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கட்டணத்தை செலுத்த முடியாமல், 3500 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பலொன்று கடந்த 2 நாட்களாக ஹெந்தலை, உஸ்வெட்டகெய்யாவ – பல்லியாவத்தை கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

இந்த கப்பலுக்கு தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் கப்பல்களுக்கு செலுத்த டொலர்களை தேடிக்கொண்டிருக்கும் வேளையில், மக்கள் தொடர்ந்தும் எரிவாயுவை பெற்றுக்கொள்ள வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

போதியளவு எரிவாயு கையிருப்பில் இல்லாமையினால், இன்று எரிவாயு விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

இறுதியாக கடந்த செவ்வாய்க்கிழமை எரிவாயு விநியோகிக்கப்பட்டதுடன், மேல் மாகாணத்திற்கு மாத்திரமே எரிவாயு விநியோகிக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்