ஜோன்ஸ்டன் சரண்; 2 சரீரப் பிணைகளில் விடுவிப்பு

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சரண்; 10 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிப்பு

by Staff Writer 09-06-2022 | 7:17 PM
Colombo (News 1st) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று பிற்பகல் கோட்டை நீதவான் திலின கமகேவின் இல்லத்திற்கு சென்று சரணடைந்தார். இதன்போது, அவரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு உத்தரவிட்ட நீதவான், வௌிநாட்டு பயணத் தடையையும் விதித்துள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களம் அறிவிக்கும் திகதியில் வாக்குமூலமளிக்க வருகை தர வேண்டும் எனவும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்றிரவு 8 மணிக்கு முன்னதாக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று பிற்பகல் உத்தரவிட்டது. அவரை கைது செய்வதற்காக கோட்டை நீதவான் பிறப்பித்த பிடியாணையை அவர் சரணடையும் வரை நடைமுறைப்படுத்த வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று உத்தரவு பிறப்பித்தது. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இறுதி தீர்ப்பொன்றை வழங்கும் வரை நீதிமன்றத்தில் ஆஜராகும் அவருக்கு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம் என கோட்டை நீதவானுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.