சுயாதீன உறுப்பினராக செயற்படவுள்ளதாக பாட்டலி சம்பிக்க ரணவக்க அறிவிப்பு

by Staff Writer 08-06-2022 | 12:18 PM
Colombo (News 1st) இன்று(08) முதல் எதிர்க்கட்சியின் சுயாதீன உறுப்பினராக செயற்படவுள்ளதாக பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது குறித்து எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு சில தினங்களுக்கு முன்னர் எழுத்து மூலம் அறிவித்ததாக அவர் கூறினார் தனிப்பட்ட ரீதியில் எவர் மீதும் கோபம் கொண்டும் இந்த தீர்மானத்தை எடுக்கவில்லை என பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார். அரசியல் கூட்டமைப்பில் இணையும் அடிப்படையில் 2020 மார்ச் 18 ஆம் திகதி செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டதாகவும் அவர் கூறினார். அந்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு ஏற்பவே தாம் சுயாதீன உறுப்பிரான செயற்படுத்துவதற்கும் தீர்மானித்துள்ளதாக பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். தனிப்பட்ட ஒருவருடன் உள்ள கோபம் அல்லது குரோதம் காரணமாக இந்த தீர்மானத்தை எடுக்கவில்லை என தெரிவித்த அவர், தொடர்ந்து செயற்பட்ட கொள்கை மதிப்பு மற்றும் மனசாட்சிக்கு ஏற்பவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார். தாம் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த செய்தி வௌியானதும் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காவே இதனை செய்துள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வௌியாகியிருப்பதாகவும் பாட்டலி சம்பிக்க பாராளுமன்ற அமர்வில் சுட்டிக்காட்டினார். அவ்வாறான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அரசாங்கத்தின் எந்த அமைச்சுப் பதவியையும் வகிக்கும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் குறிப்பிட்டார். இந்த அரசாங்கத்தின் வியூகம் மாற்றமடைய வேண்டும் என்பதுடன், இந்த அரசாங்கம் சர்வ கட்சி அரசாங்கமாகவும், இடைக்கால அரசாங்கமாகவும் அமைய வேண்டும் எனவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் கூறினார்.