ஏப்ரல் 21 தாக்குதல்: சந்தேகநபருக்கு பிணை

ஏப்ரல் 21 தாக்குதல்: சந்தேகநபர் ஒருவர் பிணையில் விடுவிப்பு

by Staff Writer 08-06-2022 | 3:23 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த ஒருவருக்கு இன்று பி​ணை வழங்கப்பட்டுள்ளது. 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் முகம்மது பாருக் முகம்மது ஹிலாம் எனும் சந்தேகநபர் சஹ்ரானின் சகோதரரால் ஆயுதங்கள் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அறிந்தும் அதனை வௌிப்படுத்தாத காரணத்தினால் கடந்த 2019 மே மாதம் 4 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். வழக்கு விசாரணை தொடர்ந்த நிலையில், சட்டத்தரணி இஸ்மாயில் உவைஸுல் ரஹ்மானினால் சமர்ப்பிக்கப்பட்ட வாய்மொழி மூலம் மற்றும் எழுத்து மூல பிணை விண்ணப்ப சமர்ப்பணங்களை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் கடந்த மாதம் சட்ட மா அதிபரின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தது. இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது, சட்ட மா அதிபர் பிணைக்கான அங்கீகாரம் வழங்கியதாக அரச தரப்பு சட்டத்தரணி மன்றில் அறிவித்தார். இதனையடுத்து, கடும் நிபந்தனைகளுடன் சந்தேகநபர் பிணையில் செல்வதற்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபில் N.M.N. அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.