by Staff Writer 04-06-2022 | 4:59 PM
Colombo (News 1st) சிறுபோக நெற்செய்கை பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறுபோகத்திற்கு தேவையான உரம் இதுவரை கிடைக்காதமையினால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் உரம் கிடைக்காவிடின், சிறுபோகத்தில் நெற்செய்கை தோல்வியடையும் என அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த காலப்பகுதிக்குள் நாட்டிற்கு தேவையான உரம் கிடைத்தால், தற்போதைய பயிர்செய்கையில் 50 சதவீத வெற்றிகரமான அறுவடையை எதிர்பார்க்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் சிறுபோகத்திற்கு தேவையான உரம் கிடைக்காவிடின் கடும் நெருக்கடி ஏற்படுமெனவும் விவசாய அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை, பெரும்போகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கான நிதி இதுவரை கிடைக்கவில்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சரவை அங்கீகாரத்தின் கீழ் இழப்பீடு வழங்குவதற்காக 15 பில்லியன் ரூபாவை கோரியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சிறுபோகத்தில் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.