இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஜூன் 6 ஆரம்பம்

பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஜூன் 6 ஆரம்பம்

by Staff Writer 04-06-2022 | 5:50 PM
Colombo (News 1st) அரச மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை மறுதினம் (06) ஆரம்பமாகவுள்ளன. பாடசாலை முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை நாளையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே, கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் திருத்தப் பணிகள் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 106 மத்திய நிலையங்களில் விடைத்தாள் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இரண்டாம் கட்ட விடைத்தாள் திருத்தப் பணிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 09 ஆம் திகதி வரை 25 மத்திய நிலையங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விடைத்தாள் திருத்தப் பணிகளில் சுமார் 40,000 பரீட்சை மதிப்பீட்டாளர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது. இதனிடையே, 2021 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடுத்த மாத இறுதியில் வௌியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிரயோக பரீட்சைகள் நடைபெற்ற பின்னர் பரீட்சை முடிவுகளை வௌியிடவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் L.M.D.தர்மசேன கூறியுள்ளார். இதற்கமைவாக, பொறியியல் தொழில்நுட்ப பாடநெறிக்கான பிரயோக பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 17 ஆம் திகதி உயிரியல் தொழில்நுட்ப பாடநெறிக்கான பிரயோக பரீட்சையும் எதிர்வரும் 29 ஆம் திகதி மனைப் பொருளியல் பாடநெறிக்கான பிரயோக பரீட்சையும் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.