வயல் காணிகளை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க திட்டம்

வடக்கு, கிழக்கில் உள்ள வயல் காணிகளை மீண்டும் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க தீர்மானம்

by Staff Writer 03-06-2022 | 4:45 PM
Colombo (News 1st) வன பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள வயல் காணிகளை, விவசாய நடவடிக்கைக்காக மீண்டும் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் விவசாய அமைப்பின் பிரதிநிதிகள், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களினதும் விவசாய அமைப்பின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்த விவசாய அமைச்சர், விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார். அதற்கமைய, தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வன பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் காணப்படும் வயல் நிலங்கள் தொடர்பிலான தரவுகளை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றை விவசாய ஆணையாளர் நாயகத்திடம் கையளிக்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். அந்த விவசாய நிலங்களை சிறுபோகத்திலும் பெரும்போகத்திலும் விவசாயம் செய்வதற்கு ஏற்றவாறு விரைவில் விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அனைத்து வயல் நிலங்களும் பயிர் செய்கைக்கு தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அந்த மாவட்டத்தின் விவசாய அமைப்பின் பிரதிநிதி, மூன்று வாரங்களில் யூரியா உரத்தை பெற்றுத்தர முடியுமானால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து மாத்திரம், 1.5 மெட்ரிக் தொன் நெல்லை நாட்டிற்கு வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்தார். அதற்கமைய, உரிய நேரத்தில் உரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்