பிரகீத் எக்னெலிகொட வழக்கு: பிணையில் விடுவிக்கப்பட்ட 9 பேருக்கு ஜூன் 13 வரை விளக்கமறியல்

by Bella Dalima 03-06-2022 | 7:18 PM
Colombo (News 1st) ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு பிணை வழங்கப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவின் 09 பேரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று உத்தரவிட்டது. சஞ்சீவ மொராயஸ் , தமித் தொடவத்த , மஹேன் வீரமன் உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கில் சாட்சி வழங்குவதற்காக மன்றில் ஆஜராகியுள்ள சுமதிபால சுரேஷ் எனும் சாட்சியாளர், இதற்கு முன்னர் சாட்சி வழங்குவதற்காக மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை என்பதுடன், பின்னர் அவரை கைது செய்வதற்காக நீதிமன்றத்தினூடாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும மன்றில் சுட்டிக்காட்டினார். சாட்சியாளருக்கு அழுத்தம் விடுக்கப்படுவதால், அது தொடர்பில் விசாரணையொன்றை நடத்த கட்டளையிடுமாறு சட்டத்தரணி மன்றில் கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கில் சாட்சியாளர்களுக்கு அழுத்தம் விடுக்கப்படுகின்றமை தமக்கும் விளங்குவதால், விடயம் தொடர்பில் நீதிமன்றம் கவனம் செலுத்த வேண்டும் என மனுதாரர் சார்பில் ஆஜராகிய சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மன்றில் சுட்டிக்காட்டினார். அதன் பின்னர் சாட்சிகள் விசாரிக்கப்பட்டதையடுத்து, மேலதிக வழக்கு விசாரணை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.