MIM மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று (02) நடைபெற்றது

by Staff Writer 02-06-2022 | 8:40 PM
Colombo (News 1st) மஹாராஜா முகாமைத்துவ நிறுவனத்தின் (MIM) இலத்திரனியல் ஊடக கற்கைகளுக்கான பாடநெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் ஸ்டைன் கலையகத்தில் இன்று (02) நடைபெற்றது. இரத்மலானை ஸ்டைன் கலையகத்தில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் H.D. கருணாரத்ன பிரதம அதிதியாக கலந்துகொண்டார். கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் தலைவர் சஷி ராஜமகேந்திரன் உள்ளிட்ட குழுமத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த வைபவத்தில் பங்கேற்றிருந்தனர். சான்றிதழ் வழங்கும் வைபவத்தை கலாசார நிகழ்வுகளும் அலங்கரித்தன. 2019-20, 2020-21 கல்வி ஆண்டுகளுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவமே இன்று நடைபெற்றதுடன், இதன்போது மூன்று பிரிவுகளின் கீழ் இலத்திரனியல் ஊடகப் பிரிவின் கற்கை நெறியினை பூர்த்தி செய்த 249 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த மாணவர்கள் இலத்திரனியல் ஊடகம் தொடர்பிலான டிப்ளோமா பாடநெறி, தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சி அறிவிப்பு சான்றிதழ் பாடநெறி, வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பிலான சான்றிதழ் பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளனர். இலத்திரனியல் ஊடக டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்து 2020 கல்வி ஆண்டிற்கான தங்க விருதை அஷான்ஜலி எஷனி டி சில்வா சுவீகரித்தார். 2021 கல்வி ஆண்டிற்கான தங்க விருதை கவின் தில்ஹார ரணதுங்க வென்றார்.