முன்னாள் மனைவிக்கு எதிரான வழக்கு: ஜானி டெப் வெற்றி

முன்னாள் மனைவிக்கு எதிரான வழக்கில் வென்றார் ஜானி டெப்

by Bella Dalima 02-06-2022 | 4:59 PM
முன்னாள் மனைவியும் நடிகையுமான ஆம்பர் ஹெர்ட் (Amber Heard) மீது பிரபல ஹொலிவுட் நடிகர் ஜானி டெப் (Johnny Depp) தொடர்ந்த அவதூறு வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். ஜானி டெப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது அமெரிக்க நீதிமன்றம். இந்த வழக்கில், ஜானி டெப்பிற்கு 15 மில்லியன் டொலர் நஷ்ட ஈடாக வழங்கப்படும் என்று அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதில் 10 மில்லியன் டொலர் நஷ்ட ஈடாகவும், 5 மில்லியன் டொலர் ஆம்பர் ஹெர்ட் தரப்பு தண்டனைத் தொகையாகவும் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நடந்த மூன்று வெவ்வெறு விசாரணையில், ஒரு முறை ஆம்பர் ஹெர்ட் தரப்பு வென்றது. இதன் மூலம், நஷ்ட ஈடாக அவருக்கு 2 மில்லியன் டொலர் வழங்கப்படும். கடந்த 2018 ஆம் ஆண்டு, Washington Post எனும் அமெரிக்க பத்திரிகையில், நடிகை ஆம்பர் ஹெர்ட் எழுதிய ஒரு கட்டுரையில், தான் திருமண உறவில் வன்முறையால் பாதிக்கப்பட்டவள் என்று தெரிவித்திருந்தார். இதில் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால், ஆம்பர் ஹெர்ட் எழுதிய கட்டுரை, தன்னையும், தன் தொழிலையும் பாதித்தது எனக் கூறி, இது தொடர்பாக, அவர் மீது அவதூறு வழக்கு தொடுத்தார் ஜானி டெப். அவரது முன்னாள் மனைவி 50 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரி அவதூறு வழக்கு தொடுத்தார். இதற்கு பதிலடியாக, ஆம்பர் ஹெர்ட் 100 மில்லியன் டொலர் நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த ஆறு வாரங்களாக, வெர்ஜினியாவில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணை தொலைக்காட்சியிலும் இணையத்திலும் ஒளிபரப்பப்பட்டதுடன், சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏழு பேர் கொண்ட நீதிபதிகள் குழு, இந்த விசாரணையை கேட்டது. இந்த வழக்கில், ஹெர்ட் தனது திருமண வாழ்வு குறித்து பொய் கூறினார் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் ஜானி டெப்பிற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது குறித்து ஆம்பர் ஹெர்ட்,
என்னுடைய ஏமாற்றத்தை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. என் இதயம் நொறுங்கிவிட்டது. என் முன்னாள் கணவரின் அதிகாரத்திற்கும் செல்வாக்கிற்கும் முன் மலையளவு ஆதாரங்கள் கூட போதுமானதாக இல்லை. இது மற்ற பெண்களையும் பாதிக்கும் என்பது குறித்தும் நான் ஏமாற்றமடைகிறேன். இது பின்னடைவே
என கூறியுள்ளார். அதே சமயம், தீர்ப்பு குறித்து ஜானி டெப்,
இந்த வழக்கின் தொடக்கம் முதலே, உண்மையை வெளியில் கொண்டு வருவதே இலக்காக இருந்தது. என் வாழ்வை இந்த நீதிமன்றம் திரும்ப அளித்திருக்கிறது. உண்மை ஒருபோதும் அழியாது
என தெரிவித்துள்ளார்.    

Source: BBC