KK மரணம் இயற்கைக்கு மாறானது என வழக்கு தாக்கல்

KK மரணம் இயற்கைக்கு மாறானது என தெரிவித்து வழக்கு தாக்கல்

by Staff Writer 01-06-2022 | 6:07 PM
Colombo (News 1st) பிரபல பாடகர் KK எனப்படும் கிருஷ்ணகுமார் குன்னத்தின் திடீர் மரணம் இயற்கைக்கு மாறானது என தெரிவித்து கொல்கத்தா பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரது தலை மற்றும் முகத்தில் காயம் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 53 வயதான கிருஷ்ணகுமார் குன்னத் நேற்றிரவு கொல்கத்தா நஸ்ரூல் மஞ்சாவில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார். மிகவும் உற்சாகத்துடன் மேடையில் பாடிக்கொண்டிருந்த அவர், திடீரென சுனயீனமுற்ற நிலையில், தாம் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு தனது பாதுகாவலர்களுடன் திரும்பிச் சென்றுள்ளார். எவ்வாறாயினும், ஹோட்டல் அறைக்கு திரும்பியதும் இதயம் கனமாக இருப்பதாகக் கூறிய சில நொடிகளிலேயே அவர் மயங்கி வீழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனடியாக அவர் கொல்கத்தா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைத்தியசாலைக்கு இரவு 10 மணியளவில் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். எனினும், அவரது உயிர் வழியிலேயே பிரிந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். திடீரென ஏற்பட்ட மாரடைப்பு மரணத்திற்கான காரணமாக இருக்கலாமெனவும் வைத்தியர்கள் கூறியுள்ளனர். எவ்வாறாயினும், KK-வின் தலை மற்றும் முகத்தில் சிறு காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். KK மயங்கி வீழ்ந்த போது ஏற்பட்ட காயமா என தெரியாத நிலையில், பிரேத பரிசோதனைக்குப் பின்னரே முழுமையான தகவல்கள் தெரியவரும் என பொலிஸார் கூறியுள்ளனர். கிருஷ்ணகுமார் குன்னத் இந்திய சினிமாத்துறையில் குறிப்பிடத்தக்க பின்னணி பாடகராகத் தடம் பதித்தவர். 90-களின் தலைமுறையினரால் பெரிதும் கொண்டாடப்பட்ட பல்வேறு பாடல்களை அவர் பாடியுள்ளார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அவர், இசைத்துறையில் எந்தவித முறையான பயிற்சியும் இல்லாமலே, தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, பெங்காலி, குஜராத்தி மொழிகளில் பல்வேறு பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றார். தமிழ் சினிமாவில் 1997 ஆம் ஆண்டு வெளியான மின்சாரக் கனவு திரைப்படத்தில் பிரபல பாடலான 'ஸ்டாபெர்ரி கண்ணே' என்ற பாடல் முதல், 'காதல் வளர்த்தேன், உயிரின் உயிரே, காதலிக்கும் ஆசை இல்லை, அப்படி போடு' என பல பிரபல பாடல்களைப் பாடியிருந்தார். தமிழ் திரைப்படங்களில் இதுவரை அவர் சுமார் 66 பாடல்களைப் பாடியுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் எதிர்பாராத மரணம் வருத்தமளிப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜூம் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கடைசியாகப் பாடிய 'த லெஜண்ட்' திரைப்படத்தின் ''கொஞ்சிக் கொஞ்சி'' பாடலை உலகம் புகழ்ந்துகொண்டிருக்கும் போது இந்த அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளதாக இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ் கூறியுள்ளார். நேற்றிரவு ட்விட்டர் முழுவதும் ரசிகர்கள் அவருடைய பாடல்களையும் அவை ஏற்படுத்திய தாக்கத்தையும் குறிப்பிட்டு தங்களது இரங்கலை வெளிப்படுத்தி வருகின்றனர்.