இறக்குமதி அனுமதிப்பத்திர நடைமுறை இரத்து; மிகை வரி விதிப்பு 

இறக்குமதி அனுமதிப்பத்திர நடைமுறை இரத்து; மிகை வரி விதிப்பு 

எழுத்தாளர் Staff Writer

01 Jun, 2022 | 8:33 pm

Colombo (News 1st) அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டத்தின் கீழ் நிதி அமைச்சு வரிகள் சிலவற்றை அதிகரித்துள்ளது.

இதற்கமைய, VAT 4 வீதத்தால் அதிகரிப்பதற்கான வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி பொருட்கள் மீதான வழமையான தீர்வை வரிக்கு மேலதிகமாக 100 வீத மிகை வரியை விதிப்பதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இறக்குமதி பொருட்கள் மீது தற்போது விதிக்கப்படுகின்ற வழமையான தீர்வை வரிக்கு மேலதிகமாக விதிக்கப்படுகின்ற வரியே மிகை வரியாகும்.

இதற்கமைய, தற்போது விதிக்கப்பட்டுள்ள வரியின் பெறுமதிக்கு நிகரான வீதத்தால் மிகை வரி விதிக்கப்பட்டுள்ளது.

வௌிநாட்டு நாணய நெருக்கடிக்கு தீர்வாக மார்ச் மாதம் 10 ஆம் திகதியில் இருந்து 369 வகையான பொருட்கள் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில், அரசாங்கம் அறிமுகப்படுத்திய வரித் திருத்தம் மற்றும் இறக்குமதி அனுமதிப்பத்திர நடைமுறை இரத்து செய்யப்பட்டு புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது.

இன்று வௌியிடப்பட்ட வரி கட்டளைகளுக்கு அமைய, இறக்குமதி செய்யப்படுகின்ற சொக்லேட் தயாரிப்புகள் மீதான வரி மீது 200 வீத மிகை வரி விதிக்கப்படுகிறது.

இறக்குமதி செய்யப்படுகின்ற Cheese உள்ளிட்ட பால் உற்பத்திகள் மீதும் 100 வீத மிகை வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை ஒரு கிலோகிராம் Cheese-ஐ இறக்குமதி செய்யும் போது விதிக்கப்பட்ட 1000 ரூபா வரி 2000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படுகின்ற அப்பிள், திராட்சை ஒரு கிலோகிராமிற்கு விதிக்கப்படுகின்ற 300 ரூபா வரி இன்று முதல் 600 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படுகின்ற தோடம்பழம் மீதான 200 ரூபா வரி 600 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மதுபானம், பானங்கள், சிகரெட் உள்ளிட்ட புகையிலை சார்ந்த உற்பத்திகள் இறக்குமதியின் போது விதிக்கப்படுகின்ற வரிக்கு மேலதிகமாக 100 வீத மிகை வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஆடைகள், வீட்டுப்பாவனைக்கான மின் உபகரணங்கள், வீட்டுத் தளபாடங்கள் உள்ளிட்ட மேலும் பல இறக்குமதி பொருட்கள் மீதும் 100 வீத மிகை வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில பழ வகைகள், தானிய வகைகள், மா சார்ந்த உணவு உற்பத்திப் பொருட்கள் மீது 75 வீத மிகை வரி விதிக்கப்பட்டுள்ளது.

வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட அழகுசாதன உற்பத்திகள், பாதணிகள், வாய் சுகாதார பொருட்கள் மீதும் 75 வீத மிகை வரியை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கண்ணாடிப் பொருட்கள், சுகாதார உபகரணங்கள், சமையல் அறை உபகரணங்கள், வீட்டுத் தளபாடங்கள் உள்ளிட்ட மேலும் சில பொருட்கள் மீது 50 தொடக்கம் 75 வீதம் வரை மிகை வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மிகை வரி இன்று முதல் 6 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்