பொது மன்னிப்பு இடைநிறுத்தம்: துமிந்த சில்வாவை மீண்டும் சிறையில் அடைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

by Bella Dalima 31-05-2022 | 5:03 PM
Colombo (News 1st) பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரன் கொலை வழக்கு தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு, ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பை இடைநிறுத்தி உயர் நீதிமன்றத்தால் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, துமிந்த சில்வாவை மீண்டும் சிறையில் அடைக்குமாறு உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உதவி மற்றும் ஆலோசனை வழங்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், துமிந்த சில்வாவிற்கு வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர்களான பி.பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். ஹிருணிக்கா பிரேமச்சந்திர, அவரின் தாயார் சுமன பிரேமச்சந்திர மற்றும் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் கஸாலி ஹூசைன் ஆகியோர் துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பிற்கு எதிராக 3 அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட சரத்திற்கு ஏற்ப ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறையினை பின்பற்றாமல், துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மன்றில் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி பொது மன்னிப்பு சட்டப்பூர்வமாக இடம்பெற்றுள்ளமையினால், அதனை ஆட்சேபனைக்கு உட்படுத்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லையென சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரில் புள்ளே வாதிட்டார். செப்டம்பர் முதலாம் திகதி மனு மீதான விசாரணைகள் மீண்டும் இடம்பெறவுள்ளன.