அமைச்சுகளுக்கான விடயதானங்கள் தொடர்பில் அறிவிப்பு

புதிய அமைச்சரவையின் 26 அமைச்சுகளுக்கான விடயதானங்கள் தொடர்பில் அறிவிப்பு

by Staff Writer 31-05-2022 | 8:58 PM
Colombo (News 1st) புதிய அமைச்சரவையின் 26 அமைச்சுகளுக்கான விடயதானங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியால் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியின் அடிப்படையில், முதலீட்டு வலயம், கொழும்பு துறைமுக நகர் அபிவிருத்தி ஆணைக்குழு மற்றும் ஶ்ரீலங்கா டெலிகாம் உள்ளிட்ட 42 நிறுவனங்கள் ஜனாதிபதியின் கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. மத்திய வங்கி , அனைத்து அரச வங்கிகள் காப்புறுதி உள்ளிட்ட 57 நிறுவனங்கள் பிரதமரின் நிதி ,பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சினுள் உள்வாங்கப்பட்டுள்ளன. முப்படை உள்ளிட்ட தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய நிறுவனங்கள் கொழும்பு நெலும் கோபுர முகாமைத்துவ நிறுவனம் , கொழும்பு லோட்டஸ் டவர் முகாமைத்துவ நிறுவனம், டெக்னோபார்க் டெவலப்மண்ட் நிறுவனம் , தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியன பாதுகாப்பு அமைச்சிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பாடல் ஆணைக்குழு , ICTA எனப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் கணினி அவசரப் பிரிவு ஆகியன பாகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. வளிமண்டலவியல் திணைக்களம், தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம், கட்டட ஆய்வு நிறுவகம், குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் , ஆட்பதிவுத் திணைக்களமும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் உள்ள நிதி பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சிற்கு உள்நாட்டு இறைவரி திணைக்களம், கலால் மற்றும் சுங்கத் திணைக்களம் , தேசிய லொத்தர் மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பவும் அடங்குகின்றன. மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவும் பிரதமரின் கீழ் உள்ள அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதேவேளை, ஊழியர் சேமலாப நிதியம் மனுஷ நாணயக்காரவின் தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் உள்ளது. ஶ்ரீலங்கன் விமான சேவை நிமல் சிறிபால டி சில்வாவின் அமைச்சான துறைமுகம் மற்றும் விமான சேவை அமைச்சின் கீழ் உள்ளது.

ஏனைய செய்திகள்