நிவாரணப் பொதிகள் பகிர்ந்தளிப்பில் அநீதி: ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு அமைப்பாளர் அறிக்கை

by Staff Writer 31-05-2022 | 8:38 PM
Colombo (News 1st)  தமிழக அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை மன்னார், திருகோணமலை, பதுளை மாவட்டங்களில் இன்று முன்னெடுக்கப்பட்டது. இதனிடையே, தமிழக மக்கள் மற்றும் தமிழக முதல்வரினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகளின் பகிர்ந்தளிப்பில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட பிரதான அமைப்பாளர் லக்ஷயன் முத்துகுமாரசாமி அறிக்கையொன்றை விடுத்துள்ளார். போரினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களுக்கு ஒப்பீட்டளவில் சிறியளவு பொதிகள் ஒதுக்கப்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்க செயற்பாடு என குறித்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். மன்னார் , முல்லைத்தீவு மாவட்டங்கள் தமது வாழ்வாதாரமாக விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில்களைக் கொண்டுள்ளதாகவும் உரம், எரிபொருள் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கும் குறித்த மாவட்ட மக்களுக்கு வழமையான புறக்கணிப்பினை அரசாங்கம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும் எனவும் தனது அறிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட பிரதான அமைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.