by Staff Writer 30-05-2022 | 10:10 PM
Colombo (News 1st) கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளரான 'ரட்டா' என்றழைக்கப்படும் ரத்திந்து சேனாரத்ன பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.
கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த 25ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது சிறைச்சாலைகள் பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரத்திந்து சேனாரத்ன இன்று(30) பிற்பகல் போராட்டக்காரர்களுடன் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற போது கைது செய்யப்பட்டார்.
பின்னர் கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, ரட்டாவை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.