உணவு பாதுகாப்பிற்காக கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

by Staff Writer 30-05-2022 | 5:25 PM
Colombo (News 1st) உணவுப் பாதுகாப்பு தொடர்பான விரிவான அரச மற்றும் தனியார் கூட்டு வேலைத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் இன்று(30) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பல நாடுகளுடனான கலந்துரையாடல்கள் உரத் தேவையை பூர்த்தி செய்வதில் வெற்றியடைந்துள்ள நிலையில், உரத் தட்டுப்பாடு அல்லது வேறு எக்காரணத்திற்காகவும் சிறுபோக பயிர்ச்செய்கையை கைவிட வேண்டாம் என ஜனாதிபதி, அனைத்து விவசாயிகளையும் கேட்டுக் கொண்டுள்ளார். சிறுபோகத்தில் அறுவடை நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுத் தட்டுப்பாட்டை குறைப்பது தொடர்பில் இன்று(30) கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. உர இறக்குமதி, விநியோகம், உரிய முகாமைத்துவம், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் விவசாயிகளையும் அதிகாரிகளையும் ஒருங்கிணைத்தல் என்பனவற்றை உள்ளடக்கி தேசிய உரக்கொள்கை வகுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப, இரசாயன அல்லது இயற்கை உரத்தைப் பயன்படுத்தி பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விவசாய அமைச்சின் முழு ஈடுபாடும் வழங்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். சிறுபோகப் பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தப்படாத விளைநிலங்களை இனங்கண்டு அவற்றில் விவசாயிகள் அதிக வருமானம் ஈட்டக்கூடிய வகையில் பயறு, கௌப்பி மற்றும் சோயா போன்ற அத்தியாவசிய பயிர்களைப் பயிரிடுவது குறித்து இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கந்தகாடு பண்ணையை சோளம், சோயா மற்றும் ஏனைய பயிர்களை பயிரிடுவதற்கு உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். விவசாயம், கால்நடைகள் மற்றும் நன்னீர் மீன்பிடி உள்ளிட்ட தொழிற்றுறைகளுக்காக மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வரையறையின்றி வழங்குவதற்கும் இந்தக் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.