by Staff Writer 29-05-2022 | 3:21 PM
Colombo (News 1st) பண்டாரகம - அட்டலுகம சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்றை ஈடுபடுத்தவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
பொலிஸ் விசாரணைகளுக்கான ஒத்துழைப்புகளை வழங்கும் நோக்கில் விசேட குழுவை ஈடுபடுத்தவுள்ளதாக அதிகார சபையின் தலைவர், கலாநிதி உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பண்டாரகம - அட்டலுகம சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் இதுவரை சுமார் 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை தெரியவரவில்லை.
சிறுமியின் சடலம் தற்போது பாணந்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று(29) இடம்பெறுகின்றது.
நேற்று முன்தினம்(27) காலை முதல் காணாமல்போயிருந்த பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதான சிறுமியின் சடலம் நேற்று(28) பிற்பகல் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
ஆயிஷா பாத்திமா எனும் குறித்த சிறுமி, நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாவார்.
இவர் அட்டலுகம அல்கஸ்ஸாலி மகா வித்தியாலயத்தில் 4ஆம் தரத்தில் கல்வி கற்று வந்தார்.
நேற்று முன்தினம்(27) காலை வீட்டிற்கு தேவையான சில பொருட்களை வாங்குவதற்காக அருகிலுள்ள கடையொன்றுக்கு சென்றிருந்த போது காணாமல் போயிருந்தார்.