by Staff Writer 29-05-2022 | 4:01 PM
Colombo (News 1st) பண்டாரகம - அட்டலுகம சிறுமி பாத்திமா ஆயிஷாவின் மரணம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கண்டனம் வௌியிட்டுள்ளார்.
இந்தக் கொடூர குற்றம் தொடர்பில் விரைவில் நீதி கிடைக்கும் என உறுதியளிப்பதாகவும் ஜனாதிபதி தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்றை ஈடுபடுத்தியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
பண்டாரகம - அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதான ஆயிஷா பாத்திமா, நேற்று முன்தினம்(27) காலை வீட்டிற்கு தேவையான சில பொருட்களை வாங்குவதற்காக அருகிலுள்ள கடையொன்றுக்கு சென்றிருந்த போது காணாமல் போயிருந்தார்.
இதனையடுத்து, நேற்று(28) அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.