எரிபொருள் விநியோகத்தை சீராக்குமாறு SLHRC பரிந்துரை

எரிபொருள் விநியோகத்தை விரைவில் சீராக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை

by Staff Writer 28-05-2022 | 3:59 PM
Colombo (News 1st) தங்குதடையின்றி எரிபொருளை மக்கள் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறையை வெகுவிரைவில் உருவாக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பரிந்துரைத்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு நேற்று (27) பிற்பகல் வரவழைக்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மக்களின் வாழ்வில் ஏற்படும் அசௌகரியங்களை தடுக்க நிறுவன மட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாக உள்ள நீண்ட வரிசைகள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.