இந்திய அரசாங்கத்தினால் மருந்துப் பொருட்கள் நன்கொடை 

இந்திய அரசாங்கத்தினால் மருந்துப் பொருட்கள் நன்கொடை 

எழுத்தாளர் Staff Writer

28 May, 2022 | 5:16 pm

Colombo (News 1st) இந்திய அரசாங்கத்தினால் ஒரு தொகுதி மருந்துகளும் மருத்துவ உபகரணங்களும் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

குறித்த மருத்துவப்பொருட்கள், பதில் இந்திய உயர்ஸ்தானிகர் வினோத் கே.ஜேக்கப்பினால் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

சுமார் 260 மில்லியன் ரூபா பெறுமதியான 25 தொன்களுக்கும் அதிக நிறையுடைய மருத்துவப் பொருட்களே இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

இந்த மனிதாபிமான உதவிப்பொருட்களை துரிதமாக விநியோகிப்பதற்காக, இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் பயன்பாட்டிற்காக மண்ணெண்ணெய்யும் இந்த கப்பல் மூலமாக கொண்டு வரப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனம் ஊடாக இந்த மண்ணெண்ணெய் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

நாட்டின் பல்வேறு பாகங்களிலுமுள்ள மருத்துவமனைகள் மற்றும் அமைப்புகள் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், மருத்துவ பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு வருகை தந்த இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கரிடம் நாட்டின் மருத்துவ தேவைகள் தொடர்பாக எடுத்துக்கூறப்பட்டிருந்தது.

தற்போது நன்கொடையாக குறித்த தேவைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு மேலதிகமாக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலை, பேராதனை போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆகியவற்றுக்கும் மருந்தும் மருத்துவ பொருட்களும் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கருடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொலைபேசியூடாக கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, வட மாகாண விவசாயிகளின் சிறுபோகத்திற்கு தேவையான உரம், மற்றும் அத்தியாவசிய பொருட்கள் போன்றவற்றை காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக, வட மாகாணத்திற்கு கொண்டு வருவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக கடற்றொழில் அமைச்சு அறிக்கையொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளது.

தொலைபேசி ஊடாக நேற்று இடம்பெற்ற இரு நாட்டு அமைச்சர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை, இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் ஏற்றுக்கொண்டதாகவும்,
குறித்த முயற்சிகளுக்கு இந்திய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் கடற்றொழில் அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்